கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் மருத்துவ செயல்முறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலை தேசிய பொறுப்பாக அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலர் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதால் நாடு பாரிய ஆபத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல பெரிய நாடுகள் திணறுகின்றன.
இந்நிலைமையில் இலங்கை மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவு வழங்குவது கட்டாயம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் வுஹான் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல், நாட்டுக்கும் மக்களுக்கும் சிரமம் ஏற்படுத்தாத வகையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரினதும் முழு ஒத்துழைப்பும் தேவை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கையர்கள் மற்றும் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள்.
தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் பிற வசதிகளை முடிந்தவரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மக்களின் பாதுகாப்பிற்காக இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்குமாறு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.