வெள்ளை வான் கடத்தல் விவகார வழக்கில் நீதிமன்றத்தினால் 04 தடவை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் விசாரணைக்கு முன்னிலையாகாத கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டில் யாராக இருந்தாலும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று குறிப்பிட்ட சுதந்திரக் கட்சியின் பேச்சளரான வீரகுமார திஸாநாயக்க, அந்த வகையில் அட்மிரல் வசந்த கரன்னாகொடவும் மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “யாராக இருந்தாலும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என தெரிவித்தார்.
அதற்கமைய அட்மிரல் வசந்த கரன்னாகொட நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்யும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனைக் கண்டிப்பதாகவும் கூறினார்.
ஆகவே அட்மிரல் வசந்த கரன்னாகொட நிச்சயம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, தொடர்ந்தும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமறைவாக இருக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதும் நீதித்துறை தமது பார்வையை திருப்ப வேண்டும் என்றும் கூறினார்.
முன்னாள் அமைச்சர் தற்போது தலைமறைவாகியுள்ளார். எங்கே இருக்கின்றார் என்பது தெரியவில்லை. மக்கள் பிரதிநிதி ஒருவர் தலைமறைவாகியிருக்கின்றார். மக்கள் மத்தியிலும் இல்லை.
தேர்தல் ஒன்று நெருங்கிவருகின்ற நிலையில், மக்கள் மத்தியில் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மத்தியில் தற்போது ரவி கருணாநாயக்க மறைவில் இருந்து வருகின்றார்.
சாதாரணமாக இந்த நாட்களில் மக்களோடு மக்களாக அரசியல்வாதிகளும் இருக்க வேண்டும். எனினும் அவர் ஒளிந்துகொண்டிருக்கின்றார்.
அவர் தலைமறைவாக இருக்கின்ற போதிலும் இந்த விவகாரத்திலிருந்து அவரால் தப்பியோடிவிட முடியாது. கடந்த 05 வருடங்களாக அவர் அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தப்பித்துக் கொண்டிருந்தார்.
அரசாங்கத்தின் பாதுகாப்பு கிடைத்தது. இப்போது அவர் தலைமறைவு. எனவே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவர் அமைச்சராக இருந்தவர் என்ற வகையில் நாட்டின் சட்டங்களை மதித்து அவசியமாக சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோருகிறோம்.
தாம் களவு செய்திருந்தாலும், மோசடி செய்திருக்காவிட்டாலும் அது விசாரணையில் நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும். ஆகவே தற்போது தலைமறைவாக இருப்பதால் அவர் திருடியுள்ளார் என்பதே ஊர்ஜிதமாகின்றது.
இது நாட்டின் சட்டங்களுக்கு முன்பாகவும் மக்களுக்கு முன்பாகவும் ரவி கருணாநாயக்க முன்னாள் அமைச்சர் என்கிற வகையில் செய்துவருகின்ற முன்னுதாரணமானது தவறாகும்.
அத்தோடு மத்திய வங்கியை தம்வசம் வைத்திருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்த விடயத்தில் முழுப்பொறுப்பு காணப்படுகிறது.
கோப் குழுவில் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்களுக்கு அமைய அவருக்கும் அதில் பொறுப்பு உள்ளது. எனவே நீதித்துறை அவர்மீதும் பார்வையை திருப்பும் என நம்புகிறோம்” என கூறியுள்ளார்.