கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக, பாலர் பாடசாலை, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக டென்மார்க் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் இன்று மாலை விடுத்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“இதன்படி, அரச ஊழியர்களுக்கு ஊதிய விடுப்பில் விடுமுறை வழங்கப்படும் எனவும் தனியார் துறையினர் முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு பணிகளை முன்னெடுக்குமாறு டென்மார்க் பிரதமர் கூறியுள்ளார்.
அத்துடன், 100 அல்லது 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளும் உட்புற நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணம் எதுவும் பதிவாகவில்லை. எனினும், குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.
இது மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தும் என டென்மார்க் பிரதமர் கூறியுள்ளார். இன்று மாலை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 442 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, டென்மார்க்கில் பல்வேறு விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோய் என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.