கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் துவங்கியதாக நம்பப்படும் COVID-19 கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகெங்கிலும் 133,008 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 4,946 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் பல நாடுகளும் பயணக்கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது உசேன் சித்திக் என்கிற 76 வயது முதியவர், சவுதி அரேபியாவிலிருந்து திரும்பியதும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் நேற்றைக்கு முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, கொரோனா பாதிப்பால்தான் உயிரிழந்தாரா என்கிற சந்தேகம் நிலவி வந்தது.
இந்த நிலையில் அவர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கர்நாடக சுகாதாரத்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.