யதார்த்தமான வழிமுறைகள் ஊடாக மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி வாக்குகளை பெறமுடியாதவர்களின் கைங்கரியம் தான் சாதி பிரச்சினை, மதப்பிரச்சினையை உருவாக்குவது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துதெரிவித்த அவர்,
எதிர்வரும் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட போவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜனநாயக நாட்டில் யாரும் எங்கும் சென்று தேர்தலில் போட்டியிடலாம்.
நாங்கள் நாங்களாக இருந்தால் வாக்குகள் பிளவடைவதற்கான வாய்ப்புகள் இல்லை.
தமிழ் கட்சிகள் கடந்த 74 ஆண்டுகளாக தமிழ்மக்களின் ஐக்கியத்தை தென் இலங்கைக்கு காட்டவேண்டும் சர்வதேச சமூகத்திற்கு காட்டவேண்டும் என்று சொல்லிவந்தார்கள்.
அந்த ஐக்கியபாட்டினூடாக மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. அது தொடர்ந்து செல்கின்றது.
அது தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே தங்களுடைய உழைப்பிற்கூடாக யதார்த்தமான வழிமுறைகளிற்கூடாக மக்களிற்கு நம்பிக்கையை உட்படுத்தி வாக்குகளை பெறமுடியாதவர்களின் கைங்கரியம் தான் சாதி பிரச்சினை மதப்பிரச்சினையை உருவாக்குவது.
இது மக்களை உசுப்பேற்றும் செயற்பாடு. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று இல்லை.
நாடாளுமன்றத்தை நடாத்தகூடிய பெரும்பான்மை இருந்தால் போதும். பின்னர் ஏனையகட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியும். 113ஆசனங்கள் ஆட்சியை நடாத்த போதும் அதற்கு மேல் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
கூட்டரசாங்கத்தின் கொள்கையுடன் எமது கொள்கைகள் இணங்கிப்போகவில்லை. எமது மக்களின் பிரச்சினைகள் அதிலிருந்து வேறுபடுகின்றது.
எனவே நாம் தனித்து நின்று போட்டியிட்டு ஆட்சியில் பங்குபற்றி மக்களின் பிரச்சினையை தீர்ப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.