கிழக்கில் உண்மையான தமிழ் தேசியவாதி அரியநேத்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதமைக்க்கு போலித் தமிழ்தேசியவாதிகளே காரணம் என அவதானிகள் கூறியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே நம்பி வாக்களித்து தமது அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து வருகின்றார்கள்.
இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பலம் பொருந்திய சக்தியாகக் காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்காக, தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைப்பதற்காக திட்டமிடப்பட்ட பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்தவகையில் தான் அரியநேத்திரன் போன்ற உண்மையான தமிழ் தேசியவாதிகளை ஒதுக்கி ஓரங்கட்டி போலிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் அரியநேத்திரனைத் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படாதமைக்கான காரணம், அரியநேத்திரன், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை உள்ளார்ந்த ரீதியாக உண்மையாகவே ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றமையே எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அச்சுறுத்தலான காலங்களிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வடக்கில் சிறீதரனும் கிழக்கில் அரியநேத்திரனும், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம்மையே ஈகம் செய்த மாவீரர்களை கார்த்திகை-27 மாவீரர் நாளில் நினைவுகூர பின்னின்றதில்லை.
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்களை நினைவுகூர்வதை விரும்பாது சட்டவிரோதமானது எனக்கூறி சட்டம் பேசும் புலி எதிர்ப்புவாத மாமேதைகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் முக்கிய பொறுப்புக்களில் இருந்து செயற்பட்டு வருகின்றார்கள்.
இவர்களுக்கு அரியநேத்திரன், சிறீதரன் போன்ற உண்மையான தமிழ் தேசியவாதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தொடர்ந்தும் இருப்பது பெரும் தலையிடியாகவே அமைந்து காணப்படுகின்றது.
வடக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீது கைவைத்தால் இப்போதிருக்கும் நிலையில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூரிய அவதானிகள்,
கிழக்கில் உண்மையான தமிழ் தேசியவாதி அரியநேத்திரன் திட்டமிடப்பட்டே ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அரியநேத்திரனுக்கு எதிராக சிங்கள தேசத்தின் கட்சியில் வேட்பாளராகக் களமிறக்கப்படு தமிழ் மக்களின் வாக்குக்களைச் சிதைக்கக் காரணமாகவிருந்த சாணக்கியன், இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகக் களமிறக்கி அரியநேத்திரனை வேட்பாளராகத் தெரிவுசெய்யாமல் ஓரங்கட்டும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் புலி எதிர்ப்புவாதிகள் சிலர் எடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் தமிழ் மக்களுக்கும் இது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆரோக்கியமானதல்ல என சுட்டிக்காட்டிய அவர்கள் இதனது விளைவுகளை விரைவில் அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.