ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது ஐரோப்பிய நாடுகளுடனான வானூர்தி சேவைகளை துருக்கி இடைநிறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று முதல் அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், நோர்வே, டென்மாக், ஒஸ்ரியா, சுவீடன், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளே துருக்கி இடைநிறுத்தியுள்ள ஏனைய நாடுகள் என செய்தி ஸ்தாபனங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாலியுடனான வானூர்தி தொடர்புகளை துருக்கி ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளது.
துருக்கியில் இதுவரை ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
துருக்கி குடியரசின் வடக்கு சைப்ரஸ் பிராந்தியத்தினுள் பிரதேச வாசிகள் தவிர வெளியாட்கள் எவரும் நுழைவதற்கு அனுமதியில்லை..
ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு இந்த தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டதனை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரத்திற்கு சவுதி அரேபியாவுடனான வான் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என சவுதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் இதுவரை 86 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள போதிலும் எவரும் இதுவரை மரணமாகவில்லை.
ஆனால், ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 97 இல் இருந்து திடீர் என 611 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அங்கு தொற்றுக்கு 12 ஆயிரத்து 729 பேர் உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கொரோனாவால் மரணித்தவர்களின் உடலங்களை ஒன்றாக பாரிய புதைகுளியில் அடக்கம் செய்யும் காட்சிகளும் ஈரானிய தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரூவண்டாவில் முதலாவது தொற்றுக்கு உள்ளானவர் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, பிலிப்பீன்ஸ் தலைநகர் மனிலாவின் நகர முதல்வர் 16 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எட்டாவது நோயாளி மரணமான நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு இரவு நேர அங்காடிகள், வர்த்தக வாளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இன்று பகலுடன் புதிதாக 34 பேருக்கு உயிர்கொல்லி தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 98 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஒரு கோடி இருபது லட்சம் மக்கள் வாழும் மனிலாவில் அவசர சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் இன்று புதிதாக 7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மொத்தமாக 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அமெரிக்காவில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் எட்டு வாரங்கள் மிகவும் பாரதூரமான காலமாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் 3 ஆயிரத்து 189 பேர் பலியானதுடன் 80 ஆயிரத்து 824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கொரோனா காரணமாக உலகளாவிய ரீதியில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தொற்று காரணமாக ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 958 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் சர்வதேச ரீதியாக 71 ஆயிரத்து 715 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.