விடுதலைப் புலிகளின் அழிவிற்கு கருணா எவ்வளவு தூரம் காரணகர்த்தாவாக இருந்தாரோ அதே போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவிற்கு சுமந்திரன் காரணகர்த்தாவாக இருந்தார் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மேலும்,
இன்றைக்கு தமிழரசுக் கட்சியின் அழிவிற்கும் சுமந்திரனே காரணமாக இருக்கின்றார். கூட்டமைப்பில் இருந்தும் தமிழரசுக் கட்சியில் இருந்தும் பலர் வெளியேறுவதற்கு சுமந்திரனே காரணம். இந்த தமிழ்க் கட்சிகளை அழிப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியால் அவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாகவே அந்தக் கட்சியின் மகளிர் அணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டு நிதர்சனமான உண்மை. அது இன்று நேற்றல்ல ஆரம்பத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதாவது; ஐதேகவால் கொண்டு வரப்பட்ட ஒருவர் தான் சுமந்திரன் என்பது பலருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.
குறிப்பாக கொழும்பில் இருக்கக் கூடிய ஊடகவியலாளர்கள் உட்பட பலர், அதே போல கூட்டமைப்பிலுள்ள பலருக்கும் இது தெரிந்திருந்தது. அவ்வாறாக அவர் கூட்டமைப்பிற்குள் வந்த பின்னர் தான் கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறியிருந்தனர்.
சுமந்திரனைப் பொறுத்தவரையில் இலங்கையில் இவ்வாறான கட்சிகள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை என்ற அடிப்படையில் அதனை முடிவிற்கு கொண்டு வருவதற்காகவே சிந்திக்கின்றதாகவே கருதுகிறோம். – என்றார்.