இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக நாளொன்றுக்கு சுமார் 1000 பாதுகாப்பு ஆடைகள் தேவைப்படுவதாக அரசு மருந்து விநியோக பிரிவின் இயக்குநர் விசேட வைத்தியர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மேலும் பரவினால் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாதுகாப்பு ஆடைத் தொகையை தற்போது அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக உலக சுகாதார அமைப்பிடமும், செஞ்சிலுவைச் சங்கத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நோயாளிக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு நாள் ஒன்றுக்கு 10 ஆடைகள் அல்லது அதற்கும் அதிகமான ஆடைகள் தேவைப்படுகின்றது. ஒரு நோயாளியை சோதனையிட்ட பின்னர் அந்த ஆடை அழிக்கப்படும்.
வைத்தியசாலைகளின் கோரிக்கைக்கமைய பாதுகாப்பு ஆடை தொகைகள் 24 மணித்தியாலங்களும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு மருந்து விநியோக பிரிவு இயக்குநர் விசேட வைத்தியர் கபில விக்ரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 18 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படுகிறது.