வெனிசுலாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக காய்நகர்த்திய எதிர்க்கட்சித் தலைவர் குவைடோ, தன்னை வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பிரகடனம் செய்தார்.
எதிர்க் கட்சித்தலைவர் குவைடோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட 60 நாடுகள் ஆதரவு தெரிவித்து, அவரை இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளது. இதனால், கடும் அதிருப்தியடைந்த ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவுடன் கடுமையாக மோதும் போக்கில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக வெனிசுலாவுக்கு அமெரிக்கா பல்வேறு கடும் பொருளாதார தடையையும் விதித்துள்ளது.
மதுரோவுக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், வெனிசுலாவின் ராணுவமும் நிக்கோலஸ் மதுரோவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இதற்கிடையில், உலகம் பூராகவும் பரவிவரும் கொரோனா வைரஸ் வெனிசுலாவிலும் வேகமாக பரவி வருகிறது. வெனிசுலாவில் இதுவரை 36 பேருக்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததன் விளைவாக அனைத்து துறையும் எவ்வித வளர்ச்சியுமின்றி கடும் மந்த நிலையில் உள்ளது.
குறிப்பாக மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடும், சிகிச்சையளிப்பதற்கு போதிய வைத்திய உபகரணம் இன்றியும் வெனிசுலா நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகள் திண்டாடி வருகின்றன.
தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் போதிய வைத்திய உபகரணங்கள் இல்லாத காரணத்தால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்து வருகின்றனர்.
வைரஸ் தங்களுக்கு பரவி விடும் என்ற பயத்தில் வைத்தியர்கள் யாரும் வைத்தியசாலைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதுமுள்ள முக்கிய வைத்தியசாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதற்கிடையே, கொரோனா வைரஸூக்கு எதிராக போராட எங்கள் நாட்டுக்கு $5 Billionயை ( சுமார் 92 ஆயிரம் கோடி ரூபா ) கடனாக வழங்கும்படி வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சர்வதேச நாணய நிதியத்திடம் ( International Monetary Fund ) கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சர்வதேச நாடுகள் நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தை அங்கீகரிக்காததால், கடன் கேட்டு அவர் விடுத்த கோரிக்கையை நிராகரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.