எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனும் முடிவானது முற்றுமுழுவதுமாக தன்னுடைய முடிவேயாகும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சட்ட நிபுணருமான செல்வி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் மேலும்,
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பைப் பற்றி நான் ஆழமாக சிந்தித்தேன். அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களது தேசிய பட்டியலில் என்னுடைய பெயரை உள்ளடக்குவதற்கும் முன்வந்தனர்.
இதேவேளை, எனக்கு எதிராக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பிழையான தகவல்கள் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எனக்கு போட்டியிட வழங்கப்பட்ட வாய்ப்பினை வாபஸ் பெற்றதாகவும், மற்றும் தேசிய பட்டியலில் என் பெயரை சேர்த்துக் கொள்ள மறுத்ததாகவும் உண்மைக்கு புறம்பான செய்திகள் வலம் வருகின்றன.
உண்மை என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட வாய்ப்புக்கள் எதுவுமே அவர்களால் வாபஸ் பெறப்படவில்லை.
மாறாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனும் முடிவானது முற்றுமுழுவதுமாக என்னுடைய முடிவேயாகும். இம்முடிவை சில தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே நான் எடுத்துள்ளேன்.
இத்தருணத்தில் பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவினை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.
மேலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் பொதுச் சேவைகளில் எனது பணி இடைவிடாது தொடரும் என உறுதியளிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்று மாலை யாழ். நகர் பகுதியில் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்றிருந்த நிலையில், அங்கு சுமந்திரனும் சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு தொலைபேசி அழைப்பை அவர் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அம்பிகாவின் பெயரை தேசிய பட்டியலில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என கடும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு விவகாரங்ளுக்காக தன்னால் தனியாக சென்று வேலை செய்ய முடியாது என்றும், குகதாசன் உங்களுக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேபோல் எனக்கு அம்பிகா முக்கியம் என மிரட்டும் தொனியில் சம்பந்தனிடம் சுமந்திரன் கதைத்துள்ளார்.
இதனையடுத்து அரசியல் வேண்டாம் என கூறிய அம்பிகாவின் பெயரானது அவர் விருப்பம் இன்றி சுமந்திரனின் விருப்பத்திற்காக இன்று காலை தேசிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணியாக கூட அம்பிகா இல்லை. மாறாக சில பட்டப்படிப்புகளை மாத்திரமே அவர் மேற்கொண்டுள்ளார்.
இப்படியிருக்கையில் இவர் மீது இவ்வளவு கரிசனை எதற்காக சுமந்திரன் காட்ட வேண்டும் என புத்திஜீவிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அரசியல் அவதானிகளின் கருத்து படி தவராசாவை பொதுவெளியில் அழைத்து பேராசிரியர் சித்தம்பலத்திற்கு நேர்ந்த கதியை தவராசாவிற்கு ஏற்படுத்துவதில் சுமந்திரன் காய் நகர்த்தியுள்ளார் என தெரியவருகிறது.
மானங்கெட்டு தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் மானம் இருந்தால், அரசியல் வேண்டாம் என அறிக்கை விட்டு இருப்பவரை வலிந்து இழுத்து தேசிய பட்டியலில் அவரின் பெயரை இணைத்ததன் உண்மை நிலையை பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் மகளிர் மற்றும் வாலிப முன்னணி கொதி நிலையில் இருக்கிறது.