120 இலங்கையர்களை படகு வழியாக பிரஞ்சு தீவுக்கு கடத்திய விவகாரத்தில், ஆட்கடத்தல் காரர்களாக சந்தேகிக்கப்பட்ட 2 இந்தோனேசியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
இந்திய பெருங்கடலில் பிரான்சின் ஆளுகையின் கீழ் உள்ள ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கையர்களை கடத்தும் செயலில் ஈடுபட்ட முதன்மையான நபர்களாக அறியப்படும் இந்த இருவரும் தனித்தனியே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 2018 முதல் இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளதாகவும் அதில் பெரும்பான்மையானோர் தஞ்சக்கோரிக்கைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே நாடுகடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 13 அன்று மீன்பிடி படகு வழியாக 120 இலங்கையர்கள் 4000 கிலோ மீட்டர் பயணித்து ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்திருந்தனர்.
இதற்காக ஒவ்வொருவரும் தலா 2 லட்சம் இந்திய ரூபாய் முதல் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை( 2,230-5,580 அமெரிக்க டாலர்கள்) ஆட்கடத்தல்காரர்களிடம் கொடுத்ததாகக் கூறப்பட்டது.
இதனை ஆட்கடத்தல் நிகழ்வாக அணுகிய பிரஞ்சு அரசு, இவர்களை அழைத்து வந்ததாக 3 இந்தோனேசிய படகோட்டிகள் மீது சட்டவிரோத குடியேற்ற குற்றச்சாட்டை வைத்தது.
அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், 3 இந்தோனேசியர்களுக்கும் 12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது