அமெரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், தன்னுடைய சேமிப்பு பணத்தை வைத்து கொரோனா அச்சத்தால் முடங்கிக்கிடக்கும் மூத்த குடிமக்களுக்கு உதவி வரும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் மட்டும் 19,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஜனாதிபதி டிரம்ப் நாட்டில் அவசர நிலையை அறிவித்துள்ளதுடன், ஐரோப்பிய நாடுகளுக்கு தடை விதித்துள்ளார்.
இப்படி அமெரிக்கா கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் நிலையில், அங்கு ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேரிலேண்ட மாகாணத்தில் இருக்கும் கெய்தர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் காவானாக் பெல். 7 வயது சிறுவனான இவர்,
தனது இரண்டு வருட சேமிப்புப் பணமான 600 டொலர்கள் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு உதவி செய்யத் தொடங்கியிருக்கிறான்.
தனது இரண்டு பிறந்தநாள்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கிடைத்த பணத்தை சேமித்து வைத்திருந்த சிறுவன், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் முதியவர்களுக்கு உதவும் நோக்கில் அந்தப் பணத்தை செலவு செய்திருக்கிறான்.
அந்தப் பணத்தின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் அடங்கிய உபகரணங்கள் மற்றும் உணவுப் பொட்டலங்களை வாங்கி, முதியவர்களுக்கு உதவியிருக்கிறான்.
அந்த வகையில் தனது சேமிப்புப் பணத்தில் 65 உபகரணங்கள் மற்றும் 31 பேருக்கு உணவு வழங்கி அசத்தியுள்ளான்.
அதேபோல், மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் தன் தாய் தொடங்கிய யூடியூப் சேனல் மூலமும் நிதியுதவியைப் பெற்று உதவி தேவைப்படுவோருக்குக் கொண்டு சேர்க்கும் பணியிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
சானிடைசர்கள், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட பொருள்களை அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தாயுடன் சென்று வாங்கும் அவர், அதுகுறித்த அப்டேட்டுகளைத் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியிருக்கிறார். மூத்த குடிமக்களை மறந்துவிடாதீர்கள் என்று கூறும் சிறுவன், இந்த உதவியில் தன்னுடன் கைகோத்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளான்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது முதியவர்களே என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், முதியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அந்நாடு அவர்களைக் கைவிட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில், மூத்த குடிமக்களுக்கு உதவும் நோக்கில் செயல்பட்டு வரும் மேரிலேண்ட் சிறுவன் பெல்லின் செயல்பாடு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.