ஈரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 6,400 பேரை காப்பாற்றிய மருத்துவர் ஷிரீன் ரூகானி ராத் கொடிய கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சீனாவிலிருந்து கடந்த டிக்ஷம்பரில் ஆரம்பமான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது.
தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிவருகிறது.
அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் ஆட்டம் கண்டுள்ளன. இந்தியா உள்பட பிற நாடுகளிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிவருவதால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
சீனா, இத்தாலியை அடுத்து ஈரான் அதிகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் மருத்து வசதிகளில் பின்தங்கிய நாடு என்பதால், உயிர்ப் பலி அதிகரித்துவருகிறது.
அந்தவகையில் ஈரானில் தற்போதைய நிலவரப்படி 1,433 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் அதிகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். நிலைமையை உணர்ந்து, மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தொடர்சியாக 15 மணிநேரம் வரை வேலை செய்துவருகிறார்கள்.
மருத்துவர்களின் அர்ப்பணிப்புரிக்குரிய பணியால் ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஈரானில் மருத்துவர் ஷிரீன் ரூகானி ராத் என்பவர் மட்டுமே 6,400 பேரை காப்பாற்றியுள்ளார்.
அவருடைய பணி தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6400 பேரை காப்பாற்றிய மருத்துவர் ஷிரீன் ரூகானி ராத்துக்கும் கொரோனா தொற்றிக்கொண்ட செய்தி வெளியாகிய நிலையில், அவருடைய மரணம் ஈரானைத் தாண்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேவேளை தனக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும் மக்களைப் பாதுகாக்க அவர் தனது உயிரைப் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.