கொரோனாவின் கொடிய மிரட்டலால் உலக அளவில் சுமார் 100 கோடி மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர்.
அத்துடன் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதிலும் அதீத பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சர்வதேச அளவில் 35 நாடுகள் முழு அடைப்பை அமல்படுத்தி உள்ளன.
வைரஸ் பரவுதலைத் தடுக்க பயணம், வர்த்தகம், வியாபாரம் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சீனாவை அடுத்து 4,800 பேர் மரணம் அடைந்துள்ள இத்தாலி முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இத்தாலியில் ஏற்பட்டதாகும்.
இதற்கிடையே அமெரிக்காவிலும் லட்சக்கணக்கானோர் வீட்டிலேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நியூ ஜெர்ஸியில் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் நாட்டுக்குள்ளேயே பயணிப்பதைத் தவிர்க்குமாறு அரசு கேட்டுக்கொண்டது,
அதேபோல இந்தியா மற்றும் இலங்கையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















