கொரோனா வைரஸ் தொடர்பாக அரசின் எச்சரிக்கை நடவடிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் கடைபிடிக்க தவறினால் இத்தாலிய பாணியில் நாடு முழுவதும் மொத்தமாக முடக்க நேரிடும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பிரித்தானியர்கள் மேலும் முட்டாள்த்தனமாக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை எனவும் போரிஸ் ஜான்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 48 என பதிவாகியுள்ளது.
இதனையடுத்து பிரித்தானியாவில் மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 281 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 5,600-ஐ கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உச்சத்தில் இருக்கும் காலகட்டத்தில் அரசின் எச்சரிக்கையை மீறி அன்னையர் தினத்தை முன்னிட்டு, பெருவாரியான பிரித்தானியர்கள் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே பிரதமர் ஜான்சன் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கையுடன் முன்வந்துள்ளார்.
இதே நிலை நீடிக்கும் என்றால் கொரோனாவால் சிக்குண்டிருக்கும் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பின்பற்றும் கடுமையான நடவடிக்கைகளை பிரித்தானியாவும் மேற்கொள்ளும் கட்டாயம் ஏற்படும் என்றார்.
அடுத்த 24 மணி நேரத்தில் கொரோனா விவகாரம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உறுதியான முடிவுக்கு வருவோம் எனவும் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதாரத்தின் அவசியம் தொடர்பில் பலமுறை விளக்கியுள்ளதாக கூறும் ஜான்சன், இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளை போன்ற கடும்போக்கு தமக்கு உடன்பாடில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த ஆலோசனைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் பின்பற்றுங்கள். ஏனெனில் இது முற்றிலும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ள போரிஸ் ஜான்சன்,
கடும்போக்கான நடவடிக்கைகளை அமல்படுத்துவதை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்,
தேவைப்பட்டால் நிச்சயமாக மேலதிக நடவடிக்கைகளை நாங்கள் கொண்டு வருவோம் எனவும் பிரதமர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.