ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஈரான் கடுமையாக இலக்கானது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் பரவலுக்கு கடுமையாக இலக்கான நாடு ஈரான்.
அங்கு இதுவரை ஆயிரத்து 685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
ஈரானில் 10 நிமிடங்களுக்கு ஒருவர் மரணமடைவதாகவும், 1 மணி நேரத்திற்கு 50 பேர் வைரசினால் பாதிக்கப்படுவதாகவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, சீனாவில் இருந்து வரும் விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் அரசு தடை விதித்தது.
இருப்பினும் அங்குள்ள தனியார் விமான நிறுவனமான மஹான் ஏர் மட்டும் தொடர்ந்து தனது சேவையை சீனாவிற்கு அளித்து வந்துள்ளது.
இந்த விமானத்தின் விமானிகளில் ஒருவர் சீனா சென்றுவந்தபோது கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் காரணமாக இறந்துவிட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மஹான் ஏர் விமான சேவையால் தான் ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா விடுத்துள்ள பொருளாதாரத் தடையால் மருத்துவபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஈரான் தவித்து வருகிறது.
பொருளாதார தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 13 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி ரவ்ஹானி, ஐ.நா. பொதுச்செயலாளருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
மட்டுமின்றி, ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். அங்கு முககவசங்கள், கையுறைகள், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவ பரிசோதனை நிலையங்களும் போதுமான அளவில் இல்லை.
இதனால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று ஈரான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்தில் ஈரானில் நவ்ருஸ் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. வழக்கமாக புத்தாண்டில் அந்த நாட்டு மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது.
இதனால் சில இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டது. இருப்பினும் பல நகரங்களில் வழக்கம்போல் மக்கள் பொது இடங்களில் கூடினர்.
அங்குள்ள காஸ்பியன் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இது போன்ற காரணங்களால் ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
பெரும் உயிர்ப்பலி ஏற்பட்டும் ஈரான் மக்கள் கொரோனா வைரஸ் பற்றி போதிய விழிப்புணர்வை பெறவில்லை என்றே கருதப்படுகிறது.