திருப்பூரில் மகள் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், செய்வதறியாது இருவரது உடல்களுடன் சில தினங்கள் தனிமையில் வசித்து வந்த 17 வயது சிறுவனும் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், காங்கயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகரைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி(71). இவரது மகள் அபர்ணா(46). அபர்ணாவின் மகன் ஜிதின் (17). சில ஆண்டுகளுக்கு முன்பு முன்பு சொந்த வீட்டில் வசித்து வந்த இவர்கள் குடும்பச்சூழல் காரணமாக வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர்.
அபர்ணாவின் கணவர் முன்பே இறந்துவிட்ட நிலையில் தனது மகன் மற்றும் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் தாய் இறந்துவிட்டதால் இறுதிச்சடங்கைக் கூட செய்ய முடியாமல் இருந்த இவர்களுக்கு அக்கம்பக்கத்தினர் பண உதவி செய்து காரியத்தினை முடிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் அபர்ணா ஆசிரியராக பணியாற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறியுள்ளார். பின்பு சரியான வேலை எதுவும் அமையாத காரணத்தினால், குடும்பம் வறுமையில் தவித்துள்ளது.
இருதினங்களுக்கு முன்பு மகனிடம் பேசிக்கொண்டிருந்த அபர்ணா திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அவதானித்த அவரது தந்தை மகள் இல்லாத நிலையில் வாழ்வதற்கு பிடிக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இருவரது சடலத்தின் பக்கத்தில் இருந்து செய்வதறியாது தவித்த சிறுவன் ஜிதின், தானும் தற்கொலை செய்வதற்கு பல வழிகளில் முயன்றுள்ளார். முடியாமல் போகவே தனது தாத்தா மற்றும் அம்மாவின் சடலத்துடன் சில தினங்கள் வசித்து, நேற்று முன்தினம் தாத்தாவின் மொபைலிலிருந்து தனது தாய்மாமாவிற்கு போன் செய்து தாத்தா, அம்மா உயிரிழந்த நிலையில், தானும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறிவிட்டு மொபைலை ஆப் செய்து வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்ற போது, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, கதவை உடைத்து பார்த்த போது அபர்ணா, வெள்ளிங்கிரி உடல் துர்நாற்றம் வீசிய நிலையிலும் ஜிதினும் தற்கொலை செய்து காணப்பட்டுள்ளார்.
சடலங்களை மீட்ட பொலிசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், வறுமையின் காரணமாக அக்கம் பக்கத்தினருடன் அதிகமாக பேசிக்கொள்ளாத இவர்கள், மகனின் படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்க வைத்துள்ளனர். சொத்து பிரச்சினையால் உறவினர்களிடமும் சரியாக பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் இருந்துள்ளனர்.
இறப்பதற்கு முன்பு ஜிதின் தனது தாய், தாத்தா மற்றும் தனது புகைப்படத்தினை வைத்து அதற்கு ரொட்டி மற்றும் நெய் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளார். இறுதியாக அவர் பேசியது பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.