கிளிநொச்சி வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ உத்தியோகத்தர்களின் குடும்பங்களிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடெங்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரம் குறுகிய காலமாக இருப்பதால், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்து வருகிறார்கள்.
உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவத் துறையினர், கொரோனா போராட்டத்துடன், தமது குடும்பங்களிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியை, முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மு.சந்திரகுமாரிடம் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதனடிப்படையில், கிளிநொச்சி வர்த்தகர் சங்கத்துடன் அவர் பேச்சு நடத்தி, உயிர்காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடுபவர்களிற்கான அத்தியாவசிய பொருட்களின் தேவையை தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்களிற்கு தேவையான பொருட்களின் விபரம் பெறப்பட்டு, கிளிநொச்சி வர்த்தகர் சங்கம் ஊடாக அவை பெறப்பட்டு, ஒவ்வொரு பணியாளரிற்குரிய பொருட்கள் தனித்தனியாக பொதி செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் ஒட்டப்பட்டு, வைத்தியசாலையிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட சமயத்தில், யாழ் நகரப்பகுதியில் நேற்று வங்கிகள் பல 11 மணிக்கே பூட்டப்பட்டது. இது குறித்த செய்திகள் வெளியான போது, வங்கி ஊழியர்களிற்கு தனிப்பட்ட குடும்பங்கள் இல்லையா என சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.
யாழில் மருத்துவத்துறை சார்ந்தவர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களிற்கு இப்படியான யோசனைகளை யாராவது முயன்றிருக்கலாமே?