மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அவசர நிலமை தொடர்பாகவும் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்று வருகின்ற அவசர கலந்துரையாடல்களுக்கு மன்னார் நகர சபை சார்பில் இது வரை யாருக்கும் அழைப்பு விடுக்கப்படுவதில்லை என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் விசனம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் பரவி வருகின்ற கொரோனா வைரஸின் தாக்கம் மன்னார் மாவட்டத்தில் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வைரஸ் தாக்கம் தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பல உயர் மட்ட கலந்துரையாடல்கள் இடம் பெற்று பல்வேறு தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் மன்னார் நகர சபையின் செயலாளர் அல்லது மன்னார் நகர முதல்வர் என்ற வகையில் இது வரை இடம் பெற்ற அவசர கலந்துரையாடல்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இராணுவம்,பொலிஸ், கடற்படை, பிரதேசச் செயலாளர்கள் உற்பட அதிகாரிகள் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்படுகின்ற போதும் மன்னார் நகரில் மக்களுடன் இணைந்து கடமையாற்றுகின்ற மன்னார் நகர சபையின் செயலாளருக்கோ அல்லது நகர முதல்வர் என்ற அடிப்படையில் எனக்கோ எவ்வித அழைப்பும் விடுக்காமல் அரசாங்க அதிபர் தன்னிச்சையாக சுய நலத்துடன் கலந்துரையாடல்கள் மேற்கொண்டு தீர்மானங்களை முன்னெடுத்து வருகின்றார்.
எனவே ஏற்படப்போகின்ற பிரச்சினைகளுக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரே மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய நிலை ஏற்படும்.
பாராளுமன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்காக சேவையாற்றுக்கின்ற மன்னார் நகர சபையின் தலைவர் அல்லது உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் கலந்துரையாடல்களை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் தன்னிச்சையான நடவடிக்கை தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் வட மாகாண ஆளுனர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர் வரும் நாட்டிகளில் அரசாங்க அதிபர் தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வகையில் செயற்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.