நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அதற்கமைய மார்ச் 30 முதல் – ஏப்ரல் 3 வரை வீட்டில் இருந்து பணியாற்றும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கும், சுய தனிமைப்படுத்தலுக்கு இடமளிப்பதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அரசாங்கம், தனியார் மற்றும் அரை அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்கள் எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட துறைகளைத் தவிர்த்து ஏனைய அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றுவோர் வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும்.
இந்த கால எல்லையை அரசாங்க விடுமுறையாக கருதக் கூடாதென ஜனாதிபதியின் ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே எதிர்வரும் 28ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.