கொரோனா வைரஸ் பரவுகின்றமை குறித்த சஜித் பிரேமதாஸவின் முன் எச்சரிக்கையை கோட்டாபய, மஹிந்த தலைமையிலான அரசாங்கம் செவிமடுத்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தவிர்த்திருந்திருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வருடம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை ஒன்றை சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.
இலங்கை நாடு கொரோனா வைரஸின் அடிவாரத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த வைரஸ் பரவுகின்ற வேகத்தை குறைக்க வேண்டும் என்றும், அதற்கமைய விமான நிலையம், துறைமுகம் என்பவற்றுக்கு வரையறைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும்,
பரிசோதனை தனிமைப்படுத்தும் முகாம்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த அறிவிப்பு ஊடாக முன்னரே அரசாங்கத்திற்கும் தகவல் ஒன்றை வழங்கியிருந்தோம்.
எனினும் பெப்ரவரி 5ஆம் திகதி சஜித் பிரேமதாஸவின் அறிவிப்புக்கு அரசாங்கத்திடம் இருந்து சிறந்த பதிலொன்று கிடைக்கவில்லை.
இந்த அறிவிப்பை அரசாங்கம் செவிமடுத்திருந்தால் இந்த அழிவை குறைத்திருக்க முடிந்திருக்கும்.
எமது நாட்டில் சிறந்த மருத்துவர்களும், படை அதிகாரிகளும் இருக்கின்றனர்.
அனைவரும் ஓரணியாகத் திரண்டு நாட்டைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.