உலகில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயான கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. இதில் இத்தாலி பரிதாப நிலையை அடைந்துள்ளது. மோசமான நிலைக்கு சென்ற சீனா தற்போது மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவை மிஞ்சிக் கொண்டு சோக நிலைக்கு ஸ்பெயின் நாடு சென்றுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,145 ஆக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்கொண்டு உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு ஸ்பெயின் நகர்ந்துள்ளது. முதல் இடத்தில் இத்தாலி 8, 215 இறப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ள சீனாவில் இதுவரை 3,287 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.