யாழில் அடைமழை பெய்துவரும் நிலையில் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் முதலை ஒன்று ஊர்மக்களால் பிடிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பிரதேசவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
உடுப்பிட்டி பிரதேசத்தின் 15 ஆம் கட்டையடியில் உள்ள சமுர்த்தி வங்கிக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு வெளியே இன்று காலை முதலை ஒன்று அயல்வீட்டுக்காரரால் அவதானிக்கப்பட்ட நிலையில் ஊர் இளைஞர்கள் குறித்த முதலையை கயிற்றால் கட்டி வைத்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த குடும்பஸ்தர்
மழை அதிகமாக பெய்த காரணத்தால் வெள்ளத்தோடு சேர்ந்து குறித்த முதலையானது அருகிலுள்ள விறாச்சிக் குளத்தில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
முதலை தொடர்பில் அயல்வீட்டுக்காரர் கருத்து தெரிவிக்கையில்,
இன்று (26) அதிகாலை 5 மணியளவில் வீட்டுக்கு வெளியே பார்த்தவண்ணம் நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்துள்ளது.
அதனை தொடர்ந்து வீட்டுக்காரர் வீட்டு வாயில் கதவை திறந்து பார்த்த போது முதலை அசைந்தவாறு இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த குடும்பஸ்தர் தனது நண்பர்களுக்கு கூறியதுடன், கிராமசேவையாளருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து முதலையை பாதுகாப்பாக பிடித்த பொதுமக்கள் அதனை கிராமசேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கையளிக்க உள்ளனர்.
இதேவேளை கடந்த மூன்று நாட்களுக்கு முதல் யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் ஆலயத்துக்கு அருகில் 8 அடி நீளமான முதலை ஒன்றும் பிடிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.