பிரதான வீதிகளில், குறுக்கு வீதிகளில் மற்றும் பொது இடங்களில் எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களை நடமாட அனுமதிக்க வேண்டாம் என பதில் காவல் துறை மா அதிபர் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் குடியிருப்பிலேயே தங்கியிருத்தல் கட்டாயமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவானது அனைத்து காவல் துறை பிரிவிற்கும் செல்லுபடியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காவல் துறை ஊரடங்கு சட்டத்தின் உத்தரவிற்கு அமைய செயற்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பதில் காவல் துறைமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உடனடியாக அமுலுக்கு வரும் அரச மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மருந்தகங்களையம் மூடுமாறு பதில் காவல் துறை மா அதிபர் சீ . டீ . விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் காவல் துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன எமது செய்திபிரிவிற்கு தெரிவித்தார்.
இதற்கமைய மருந்துகனை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று பகிர்ந்தளிப்பது தொடர்பில் சிறப்பு சந்தை வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த சிறப்பு சந்தை வர்த்தக நிலையங்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்ய திறந்து வைக்கப்படுமாயின் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.