நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில், கடற்றொழில்சார் போக்குவரத்துக்களை மேற்கொள்வோரும் கடல்சார் உற்பத்திகளின் வியாபாரிகளும் தங்கள் பிரதேசங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைகளத்தின் உதவிப் பணிப்பாளரை அணுகி, அவர்களின் சிபாரிசு கடிதத்தினைப் பெற்று அதனை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து போக்குவரத்து அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக கடற்றொழில் சமூகத்தினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று அமைச்சில் சம்ந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தீர்மானம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளரை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலோசனைக்கு அமைய தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.