இலங்கையின் பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக, கடல்நீர் குடிநீருடன் கலந்துள்ளதால் களுத்துறை மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது..
களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை, பேருவளை, பாணந்துறை மற்றும் தொடங்கொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 50,452 குடும்பங்களைச் சேர்ந்த 212,728 பேர் இந்தப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறையில் 19,776 குடும்பங்களைச் சேர்ந்த 78,359 பேரும் பேருவளையில் 22,527 குடும்பங்களைச் சேர்ந்த 103,665 பேரும் பாணந்துறையில் 3,604 குடும்பங்களைச் சேர்ந்த 17,040 பேரும் தொடங்கொட பகுதியில் 4,545 குடும்பங்களைச் சேர்ந்த 13,664 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி முதல் கடல் நீர், குடிநீருடன் கலந்துள்ளதால் இந்தக் குடும்பங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மார்ச் மாதம் 29 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், கேகாலை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை, கம்பஹா, புத்தளம், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொலநறுவை மற்றும் மட்டங்களப்பு ஆகிய மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பத்து மாவட்டங்களிலும் 40,763 குடும்பங்களைச் சேர்ந்த 143,935 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் பிரகாரம் அதிக வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ள கேகாலை மாவட்டத்தில் 11,293 குடும்பங்களைச் சேர்ந்த 42,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டம் வறட்சியால் அதிக பாதிப்பை சந்தித்த இரண்டாவது மாவட்டமாக பதிவாகியுள்ளதுடன் அம் மாவட்டத்தில் 11,604 குடும்பங்களைச் சேர்ந்த 36,856 பேர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டமே வறட்சியால் குறைந்தளவு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 176 பேர் வறட்சி நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் திஸ்ஸமஹாராம மற்றும் வீரஹெட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறுவர் வறட்சி நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீரிற்குள் கடல் நீர் கலந்தமை மற்றும் வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 91,215 குடும்பங்களைச் சேர்ந்த 356,663 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கேகாலை, இரத்தினபுரி, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் குடிநீரில் கடல் நீர் கலந்ததால் பாதிக்கப்பட்டுள்ள களுத்துறை மாவட்டத்திற்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.
எனினும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களான கண்டி, கம்பஹா, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.