கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகக் கூடாது என்பதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாதவாறு தொடர்ச்சியாகப் பேணுவதற்கு, அரச சேவையாளர்கள், வியாபாரிகள் மற்றும் பெருந்தோட்டத்துறையுடன் தொடர்புபட்டோர் சுயதொழில் செய்பவர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களுக்கு வழங்கப்படக் கூடிய தீர்வுகள் பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியினருடனான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது, கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதைக் தடுப்பதற்காக அரசாங்கம் இது வரையில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆழமாகத் தெளிவுபடுத்தினார்.
இது வரையில் வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலனவர்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களிலிருந்தே இணங்காணப்பட்டவர்கள் அல்லது அதற்கு முன்னர் வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்போர் இணங்காணப்பட்டமையானது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக அமைந்தது என்று இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
மக்கள் தமது வாழ்க்கையை வழமைபோல் கொண்டு செல்வதற்கு அத்தியாவசிய சேவைகள், உணவு பொருட்கள், மருந்துகள் பகிர்ந்தளிப்பதற்கான பொறிமுறை மற்றும் செயலணியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அதன் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ இதன் போது தெளிவுபடுத்தினார்.
நாட்டில் இணங்காணப்பட்டுள்ள 65 இலட்சம் குடும்பங்களில் 53 இலட்சம் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் இம் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது பசில் ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகக் கூடாது என்பதே இரு தரப்பினரதும் கருத்தாகக் காணப்பட்டது.
வேலைத்திட்டங்கள் அரசியல் சார்பற்றதாக காணப்பட வேண்டும் என்ற கருத்திற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாதவாறு தொடர்ச்சியாகப் பேணுவதற்கு, அரச சேவையாளர்கள், வியாபாரிகள் மற்றும் பெருந்தோட்டத்துறையுடன் தொடர்புபட்டோர் சுயதொழில் செய்பவர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களுக்கு வழங்கப்படக் கூடிய தீர்வுகள் பற்றி இருதரப்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
வைத்தியர்கள் உள்ளிட்ட சுகதாரத்துறையினர், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு இரு தரப்பும் கௌரவத்தைத் தெரிவித்தனர்.
கலந்துரையாடலில் பங்குபற்றிய குழு மாவட்ட ரீதியில் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மணித்தியாலயங்களுக்கு அதிக நேரம் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் மிக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது.
இந்த கலந்துரையாடலில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சர்களான தினேஷ்குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோரும் ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக அர்ஜூன மகேந்திரன், ருவன் விஜேவர்தன, தயா கமகே, பாலித ரங்கே பண்டார, நவீன் திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல மற்றும் மத்திய வங்கி ஆளுனர் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.