கடந்த சில மாதங்கள் தொடங்கி இன்றுவரை என்றுமுடியுமோ என எல்லோராலும் எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் உலக மக்கள் 47,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிப்புக்குள்ளோரின் எண்ணிக்கை 935,581 உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தும்மும்போது அவரது மூக்கில் இருந்து வெளிப்படும் நீர்த்துளி 27 அடி வரை வைரஸுடன் பயணிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) ஆராய்ச்சியாளர் லிடியா பவுரவுபியாவால் எழுதிய கட்டுரையை ஜர்னல் ஆப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றால், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். குறைந்தபட்சம் ஆறு அடி தூரம் (2 மீட்டர்) விலகி இருக்க வேண்டியது அவசியம்.
ஏனெனில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது, அவரது மூக்கில் இருந்து வெளியேறும் சளித்துளிகள் 27 அடி தூரம் வரை காற்றில் பரவும் தன்மைகொண்டுள்ளது.
அதன் மூலம் வைரஸும் காற்றில் பரவும். அதாவது 23 முதல் 27 அடி தூரம் வரையில் அவரை சுற்றி வைரஸ் பரவி இருக்கும். இந்த இடைவெளியில் யாராவது செல்லும்போது அவரையும் வைரஸ் தாக்கக்கூடும்.
வெப்பமான இடம் என்றால், சளித்துளிகள் வேகமாக ஆவியாகிவிடும். ஆனால், வெப்பநிலை குறைவான ஏ.சி. அறைகள் அல்லது குளிர்ச்சியான பகுதிகள் என்றால், வைரஸ்கள் அங்கேயே பரவி இருக்கும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆய்வு தவறானது என்றும், இது தவறாக வழிநடத்தும் என்றும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தும்மல் இருக்கும் என்று கூற முடியாது என்று அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி பாசி கூறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.