இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 7 மணியாகும் போது 151 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளில் பதிவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இந்த 151 பேரில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், சீன பெண் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 127 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில், நேற்று யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டவர் மத போதகர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய இருவர் உள்ளடங்குகின்ரனர்.
அரியாலை பகுதியில் உள்ள மத போதகர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய மத குரு ஒருவரே நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று அந்த மத போதகருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் இருவர் கொரோனா தொற்று குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இலங்கையின் கொரோனா வைரஸை காரணம் காட்டி முடக்கப்பட்ட முதல் ஊர் யாழ். அரியாலை பிரதேசமாகும். கடந்த மார்ச் 21 ஆம் திகதி அந்த ஊர் முடக்கப்பட்டது.
இந் நிலையில் அந்த ஊர் இன்னும் இரண்டு நாட்களுக்கு முற்றாக முடக்கப்பட்டிருக்கும் என அறிய முடிகின்றது. அந்த மூன்று நாட்களின் பின்னர் அந்த ஊர் சாதாரண ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவரப்படக் கூடிய சாத்தியங்கள் இருந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் 4 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனைவிட இன்று மட்டும் மொத்தமாக 5 கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் அறிவித்த நிலையில், யாழ்ப்பாணத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்ப்ட்டவர்களில் இருவர் கொழும்பு மருதானை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர். இவர்கள் கொரோனாவால் உயிரிழந்த நபரின் மருமகன் மற்றும் பேரப் பிள்ளைகள் என தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்களுக்கு அமைய, நாடளாவிய ரீதியில் 26 வைத்தியசாலைகளில் 4 வெளிநாட்டவர்கள் உட்பட 251 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 35 ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக அதிக தொற்றாளர்கள் புத்தளம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆகும். அதற்கு அடுத்தபடியாக களுத்துறை மாவட்டத்தில் 24 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 11 தொற்றாளர்களும், கண்டி, யாழ் மாவட்டங்களில் தலா 4 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 3 ஆகும். இதனைவிட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மாவட்டங்களாக காலி, கேகாலை, மட்டக்களப்பு, மாத்தறை, பதுளை ஆகிய மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளான. இம்மாவட்டங்களில் தல ஒவ்வொருவர் வீதம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.