சிங்கப்பூர்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிங்கப்பூரில், பள்ளிகள், பணியிடங்கள் உள்ளிட்டவை ஏப்ரல் 7 முதல் மே 4 வரை மூடப்படும் என அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங் அறிவித்துள்ளார். உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், வங்கிகள் உள்ளிட்ட அத்யாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும் என தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு சிங்கப்பூரில் இதுவரை 1,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, பள்ளிகள், பணியிடங்கள், வழிபாட்டு தலங்களை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
மார்க்கெட்கள், சூப்பர் மார்க்கெட்கள், கிளினிக்குகள், மருத்துவமனைகள், போக்குவரத்து, முக்கிய வங்கிய சேவைகள் உள்ளிட்ட அத்யாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும். இது ஏப்ரல் 7 முதல் மார்ச் 4 வரை நடைமுறையில் இருக்கும்.
இது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் கூறியதாவது: முடிந்தவரை மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். வீட்டு வேலைகளை தவிர்த்து, மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும். அத்யாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல வேண்டும்.
நாட்டிற்கு தேவையான உணவு பொருட்கள் உள்ளன. அரசின் நடவடிக்கை நோய் தொற்று பெரிய அளவில் பரவுவதை தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கும், கொரோனா பாதித்தவருக்கு எந்த அறிகுறியும் தென்படாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவர் மற்றவர்களுக்கு வைரசை பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாஸ்க் அணிந்தாலும் சரி அல்லது மாஸ்க் அணியாவிட்டாலும் சரி, மக்கள் தொடர்ந்து கைகளை கழுவுவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.