மொறட்டுவை எகொடஉயன பகுதியில், வீதித் தடையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மொறட்டுவை பகுதியிலிருந்து பாணந்துறை நோக்கி நேற்றிரவு 10.20 மணியளவில் குறித்த கார் பயணித்துள்ளது. காரை நிறுத்துமாறு வீதித்தடைக்கு அருகிலிருந்த பொலிஸாரால் உத்தரவிடப்பட்ட போதும், அந்த உத்தரவை மீறி கார் பயணித்துள்ளது.
காரை நிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், அதனையும் மீறி செல்ல முயற்சித்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட பின்னர் குறித்த கார் பாணந்துறை வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
காரில் 4 பேர் பயணித்துள்ளதுடன், காரின் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.