பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நபர் அதில் இருந்து குணமடைந்த நிலையில், அவருக்கு மருத்துவ குழு உற்சாகமாக விடை கொடுத்தனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் தற்போது வரை 41,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4,313 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் 95 சதவீதம் பேர் மிதமான அளவில் தான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் 5 சதவீதம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மிதமான பாதிப்புள்ள நபர்கள் பெரும்பாலும் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உயிர் பிழைப்பது அரிதாகிறது.
இதன் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டால், உயிரிழப்பு நிச்சயம் என்ற வருத்தம் அனைவர் மத்தியிலும் நிலவியிருக்கும் நிலையில், அந்த வருத்தத்திற்கு நம்பிக்கையூட்டும் வகையில் நாட்டில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நபர் மீண்டு குணமடைந்துள்ளார்.
இங்கிலாந்தின் லிசெஸ்டர் நகரத்தை சேர்ந்த அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 7 நாட்கள் தொடர் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது அந்த நபர் குணமடைந்துள்ளார்.
இதையடுத்து அவர் டிஸ்சார்ஜும் செய்யப்பட்டார். அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர் இருபுறமும் வரிசையாக நின்று கைகளைத் தட்டி உற்சாகமாக விடை கொடுத்தனர்.
இந்தச் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை அளித்த குழுவைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் மனைவி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவுடன் அவரின் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.