எம்.எஸ்.சி மாக்னிஃபிகா சொகுசுக் கப்பலில் சிக்கியுள்ள இலங்கையரை மீட்க ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவின்படி, கடற்படையின் அணியொன்று அவரை அழைத்து வர அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று அவர் இலங்கைக்குள் அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு பயணித்த எம்.எஸ்.சி மாக்னிஃபிகா சொகுசுக் கப்பலில் இலங்கையர் ஒருவரும் பணித்தார். எனினும், கொரோனா அபாயம் ஏற்பட்டதையடுத்து, அந்த கப்பலை தனது நாட்டில் நங்கூரமிட அவுஸ்திரேலியா அனுமதிக்கவில்லை.
இதையடுத்து கப்பல் மீண்டும் இத்தாலி நோக்கி பயணத்தை தொடங்கியது.
இந்த நிலையில் தற்பொழுது கப்பல் இன்று இலங்கைக்கு அண்மையான கடற்பரப்பில் பயணிக்கவுள்ளது.
கப்பலிற்கு தேவையான பொருட்களை இலங்கையிலிருந்து பெறுவதற்காக இலங்கைக்கு அருகில் கப்பல் தரித்து நிற்கவுள்ளது.
குறித்த கப்பலில் இருந்த இலங்கையரான அனுர பண்டார என்பவர் தன்னை மீட்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கையெடுக்க வேண்டுமென உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, ஜனாதிபதி செயலகம் அதில் தலையிட்டு, வெளிவிவகார அமைச்சின் ஊடாக நடவடிக்கையெடுத்ததுடன் குறிப்பிட்ட இலங்கையரை இன்று இலங்கையில் தரையிறங்க அனுமதிக்குமாறு கப்பல் நிறுவனத்திடம் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டிருந்தது.
இதையடுத்து அவர் இன்று இலங்கையில் தரையிறங்குவார் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த கப்பலில் கொரோனா சந்தேகநபர்கள் யாருமில்லையென வீடியோவில் அனுர பண்டார தெரிவித்திருந்தபோதும், அவர் தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னரே வீடு செல்ல அனுமதிக்கப்படுவார் என கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.