இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று சந்தேகத்தால் ஊர் மக்களால் ஒதுக்கப்பட்டவர் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில அரசு அதிகாரி கூறியதாவது, ஹிமாசலப் பிரதேச மாநிலம் உனாவில் உள்ள பங்கா் கிராமத்தில் வசித்த முகமது தில்ஷாத் (37) என்பவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகித்து தனிமைப்படுத்தும் முகாமுக்கு சமீபத்தில் அழைத்துச் செல்லப்பட்டாா்.
அவருக்கு நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின், அவரை சுகாதார அதிகாரிகள் அவரது கிராமத்தில் சனிக்கிழமை விட்டுச் சென்றனா். மறுநாள் தனது வீட்டில் அவா் தற்கொலை செய்துகொண்டாா் என்றாா்.
இதுதொடா்பாக டிஜிபி சீதா ராம் மாா்டி கூறுகையில், முகாமில் இருந்து திரும்பிய பின் முகமது தில்ஷாத்திடம் கிராம மக்கள் பாகுபாடு காட்டி, அனைவரும் அவரை ஒதுக்கிவைத்துள்ளனா்.
இதனால் அவா் தற்கொலை செய்துகொண்டாா் என கூறியுள்ளார்.
இதனிடையே தில்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய நபருடன் முகமது தில்ஷாத் தொடா்பில் இருந்ததாகவும், அவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.