கொரோனா வைரஸ் தொடர்பிலான வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பதாகக் கூறி கருத்துச் சுதந்திரத்தை நசுக்க இடமளிக்க முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னணி ஊடகவியலாளர் அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
தகுதிவாய்ந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படாத கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும் அவ்வாறான தகவல்களை பகிர்வதும் தண்டனைக்குறிய குற்றம் என்று தெரிவித்து பொலிசார் அறிவித்திருந்தனர்.
ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் ஏப்ரல் முதலாம் திகதி “சமூக வலைத்தளங்களில் வதந்திகளையே அல்லது குழப்பங்களை ஏற்படுத்தும் தகவல்களையோ வெளியிடும் நபர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் பொலிஸ் திணைக்களத்தின் இந்த அறிக்கையை இன்று உறுதிப்படுத்திய பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, சமூக வலைத்தளங்களில் கொரோனா தொடர்பிலான வதந்திகளை பரப்பினால் குறைந்தபட்சம் ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீலங்காவின் முன்னணி ஊடகவியலாளர் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அதில் நாடு ஒரு பேரிடருக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் கருத்துச் சுதந்திரத்திற்கும், மொழி பயன்பாட்டிற்கும் சில வரையரைகள் இருக்க வேண்டியது அவசியமாகின்ற போதிலும் ஜனநாயகத்துடனும், ஏனைய மனித உரிமைகளுடனும் தொடர்புபட்ட விடையங்களாக இருப்பதால் மிகவும் அவதானத்துடனும் பரந்துபட்ட புரிதலுடனும் அந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
பேரிடர் காலங்களில் வதந்திகளும், போலியான தகவல்களும் வெளியிடப் படுவதால் சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதை பொறுப்புவாய்ந்த ஊடகவியலாளர் அமைப்புக்களான தாங்களும் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதனால் அவ்வாறான வதந்திகள் மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சமூகமயப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், ஊடகவியலாளர் அமைப்புக்களான தாங்களும் தனித்தும், கூடடாகவும் இவ்வாறான தகவல்கள் சமூகமயப்படுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளன.
எனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றை தடுப்பதற்காகவெனக் கூறி கைதுசெய்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பது தீர்வாக அமையாது என்றும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
வதந்திகளும், உண்மைக்குப் புறம்பான தகவல்களும் சமூக மயமாவதை தடுக்க வேண்டுமானால் உண்மையான தகவல்களை அதிகளவில் சமூக மயப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ஊடகவியலாளர் அமைப்புக்கள், இந்த செயலால் மக்களின் உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றன.
அதேவேளை வதந்திகளையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதை தடுக்கும் நடவடிக்கைகள் சமூக வலைத்தளங்களுக்கு மாத்திரமன்றி ஏராளமான பார்வையாளர்களை கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
தொலைக்காட்சிகள் உட்பட நாட்டின் பிரதான ஊடகங்கள் கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடியான கால கட்டத்திலும் இனவாதத்தை தூண்டும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதை தடுக்கும் வகையில் ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய வழிகாட்டிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அதன் ஊடாக சிறந்த ஊடக பாவணைக்கான வழிகாட்டிகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
அதேவேளை பொலிஸ் தலைமையகம் வெளியிடப்படும் அறிக்கைகள் சிங்கள மொழியில் மாத்திரம் இருக்கக்கூடாது என்றும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. சிங்கள மொழியில் மாத்திரம் முக்கியான அறிக்கைகளை வெளியிடுவதால் அதிலுள்ள கட்டுப்பாடுகளை ஏனைய சமூகத்தினரால் அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுவது மாத்திரமன்றி அவர்கள் தண்டிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனால் பொலிஸ் தலைமையகம் உட்பட அரசாங்கம் வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் நாட்டின் நடைமுறையிலுள்ள அனைத்து நிர்வாக மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டிதன் அவசியத்தையும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,முஸ்லீம் மீடியா போரம், சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பு, தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், இணையத்தள ஊடகவியலாளர் அமைப்பு, இளைய ஊடகவியலாளர் சங்கம் உட்பட முன்னணி ஊடகவியலாளர் அமைப்புக்கள் இணைந்து இந்த அவசர அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.