கொரோனா வைரஸினால் நாடு மிக மோசமான நெருக்கடிக்கள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் அதனை காரணம் காட்டி நாட்டை சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
வைரஸ் தொற்றுக்கு அனைவரும் இணைந்து முகம்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள சஜித் பிறேமதாச எனினும் அதனை காரணம் காட்டி நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளிவிட இடமளித்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு இன்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள மிக மோசமான நெருக்கடியை காரணம் காட்டி நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரத்துவதற்கு சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதற்காகவே மூன்று வருடங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்படக் கூடாது என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“ஜனநாயக விரோதமான சக்திகள் எமது நாட்டை குழப்பியடிப்பதற்கு சூழ்ச்சி செய்வதாக அறியமுடிகிறது. இந்த நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்த்த வேண்டாம். வைரஸ் தொற்று நாட்டில் மிக மோசமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனை அடிப்படையாக வைத்து அரசியல் இலாபம் தேட நாரும் முற்படக் கூடாது. பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
பட்டினியில் உள்ள மக்களுக்கு உணவளிக்க வேண்டும். மக்கள் இழந்த வருமானத்தை மீளப் பெற்றுக்கொடுக்க வேண்டும். மாறாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும் எதிராக கருத்துகூறுவதால் தீர்வுகாணமுடியாது.
ஆகவே இந்த நாட்டு மக்களின் பட்டினிக்கு தீர்வைக் கொடுக்கும்படி அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். எமது பிரதான இலக்கு தேர்தலை நடத்துவதல்ல, மக்களை வாழவைப்பதாகும். போராட்டங்களை செய்து தேர்தலை பிற்போட வைத்துள்ளோம்.
ஆனால் எப்படியாவது தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதே ராஜபக்ச சகோதரர்களினதும் அரசாங்கத்தினதும் பிரதான நோக்கமாக காணப்பட்டது.
ஆகவே நிவாரணங்களை வழங்கும் செயற்பாட்டில் அரசியல் கலப்படம் அனுமதிக்கப்படக்கூடாது. அரச ஊழியர்களுக்கு இதற்கான அதிகாரத்தை முழுமையாக வழங்க வேண்டும். மக்கள் ஆணையைப் பெற்றவர்கள் முதலில் மக்களை வாழவைக்க வழி செய்ய வேண்டும்”
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, அவரது சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச சகிதம் நேற்றைய தினம் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களை சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகள் எந்தவொரு அரசியல் கலப்படமும் இன்றி முன்னெடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் அந்த வாக்குறுதிகளை நிராகரித்துள்ள சஜித் பிரேமதாச, கொரோனா வைரஸின் தாண்டவம் ஸ்ரீலங்காவிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்துவதை விடுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை எப்படி கைப்பற்றுவது என்பது குறித்தே ராஜபக்ச சகோதரர்கள் அதிக கரிசணையுடன் செயற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.