தமிழ் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு அறிக்கைவிடுவதை நிறுத்திவிட்டு உடனடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ் வணிகர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் அத்தியவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் யாழ் மாவட்ட மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளலாம் என்றும் தெரிவித்து அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையிலேயே யாழ் வணிகர் கழகம் இந்த கோரிக்கையை விடுத்திருக்கின்றது.
கொரோனா வைரஸ் வரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா அரசாங்கம் மார்ச் 20 ஆம் திகதி மாலை ஆறு மணி முதல் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அத்தியவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ் மாவட்டத்தில் வாழும் மக்கள் பட்டினிச் சாவிற்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கட்சிகள் எச்சரிக்கை விடுத்து அறிக்கைகளை விடுத்திருந்தன.
எனினும் தமிழ் தேசியக் கட்சிகளின் இந்த எச்சரிக்கைகளை இன்று யாழ் ஊடக அமையத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய யாழ் வணிகர் கழகம் நிராகரித்ததுடன், யாழ் மாவட்ட வர்த்தகர்களிடம் போதுமான அளவு அத்திவசிய பொருட்களுக்கு கையிருப்பில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தினர்.
இதனால் மக்கள் பதறி அடித்துக்கொண்டு அதிகளவில் பொருட்களை கொள்வனவு செய்து செயற்கையான தட்டுப்பாடொன்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் யாழ் வணிகர் கழகத்தின் தலைவர் ஜனக்குமார் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அறிக்கைகளை விடுத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதை விடுத்து தமிழ் அரசியல் கட்சிகள் உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அவசரத் தேவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யாழ் வணிகர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த போர் காலங்களிலும் சுனாமி பேரலை உட்பட பேரனர்த்தங்களின் போதும் யாழ் மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் தமது சமூகத்திற்கான சேவைகளை ஆற்றிவந்துள்ளதாகவும் தெரிவித்த யாழ் வணிகர் கழகத்தினர், அதேபோல் தற்போதைய கொரோனா நெருக்கடியின் போதும் மக்களுக்குத் தேவையான அத்தியவசிய பொருட்களை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.