லண்டனில் உள்ள மருத்துவமனைக்குள் புகுந்து கொரோனா பரவலை தடுக்க உதவும் மாஸ்குகளை திருடி சென்ற நபருக்கு 12 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
King’s College மருத்துவமனைக்குள் கடந்த 5ஆம் திகதி சென்ற Lerun Hussain (34) என்ற நபர் அங்கிருந்து நான்கு மாஸ்குகளை திருடியுள்ளார்.
ஆனால் மருத்துவமனையில் இருந்து Lerun Hussain வெளியேறுவதற்குள் காவலாளி அவரை பார்த்துவிட்ட நிலையில் இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார்Lerun Hussain-ஐ கைது செய்தார்கள். பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு அரச வழக்கு விசாரணை சேவை தெரிவிக்கையில், Lerun திருடிய பொருட்களின் விலை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் தற்போது கொரோனா தொற்று நோயின் சமயத்தில் அதன் பயன்பாடு மிக முக்கியமானது.
முக்கியமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு மாஸ்க் முக்கியமாக தேவை, ஏனெனில் அதை அணிந்து கொண்டு தான் நோயாளிகள் மிக அருகில் சென்று சிகிச்சையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மாஸ்குகளை திருடிய குற்றத்துக்காக Lerun-க்கு 12 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனிடையில் Lerun திருட்டு வழக்கில் சிக்குவது இது முதல் முறை கிடையாது எனவும் அவர் மீது ஏற்கனவே திருட்டு சம்மந்தமான குற்றச்சாட்டுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.