கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து இறைச்சிக்காக வளர்க்கக்கூடிய கால்நடைகளின் புதிய வரைவு பட்டியலை சீன அரசு வெளியிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உள்ள சந்தையில் காட்டு விலங்குகளிலிருந்து தோன்றியதாக சந்தேகிக்கப்படுகிறது.
கொரோனா பரவியதை தொடர்ந்து உணவுக்காக காட்டு விலங்குகளின் அனைத்து வர்த்தகத்தையும் தற்காலிகமாக தடை செய்தது சீனா, ஆனால் புதிய சட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சீனாவின் வேளாண் அமைச்சகம் புதன்கிழமை இரவு கால்நடைகளாகப் பயன்படுத்த ஏற்றது எனக் கருதப்படும் விலங்குகளின் வரைவு பட்டியலை வெளியிட்டது, இதில் பன்றிகள், பசுக்கள், கோழிகள் மற்றும் செம்மறி ஆடுகள், அத்துடன் பல வகை மான், அல்பாக்கா மற்றும் தீக்கோழிகள் போன்ற ‘சிறப்பு கால்நடைகள்’ ஆகியவை அடங்கும்.
இரண்டு வகையான நரி, ரக்கூன்கள் மற்றும் மின்க்ஸை கால்நடைகளாக வைத்திருக்கலாம், ஆனால் அவற்றின் இறைச்சிக்காக அல்ல.
மனிதர்களுக்கு கொரோனா வைரஸை பரப்பியதாக விஞ்ஞானிகளால் சந்தேகிக்கப்படும் பாங்கோலின், வெளவால்கள் மற்றும் சிவெட் பூனைகள் போன்ற விலங்கு இனங்கள் பற்றி புதிய வரைவு பட்டியலில் குறிப்பிடப்படவில்லை
கால்நடைகளின் பட்டியலில் நாய்களும் இடம்பெறவில்லை, இந்த பட்டியில் அப்படியே முறையாக அமல்படுத்தப்பட்டால், விலங்கு உரிமை ஆர்வலர்களுக்கு கிடைத்த வெற்றியில் சீனாவில் நாடு முழுவதும் முதல் முறையாக நாய் இறைச்சி தடைக்கு வழிவகுக்கும்.
புதிய வரைவு பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை வழங்க மே 8 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.