கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மாதம் இடை நிறுத்தப்பட்ட மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள நடுக்குடா காற்றாலை மின்சக்தி உற்பத்தி திட்டம் மின்சார தேவை காரணமாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட நடுக்குடா பகுதியில் காற்றாலை மின் சக்தி உற்பத்தி திட்டமானது நடை முறைப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட கொரோனா தொற்று அச்சம் காரணமாக அனைத்து பணிகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த செயற்திட்டம் தொடர்பாக ஆலோசிக்கும் விசேட கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (10) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் , மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், கற்றாலை மின் சக்தி மின் திட்ட பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கூட்டத்தின் போது குறித்த காற்றாலை மின் சக்தி செயற்திட்டம் ஆரம்பிக்கப் பட வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில் விரைவாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், குறித்த செயற்திட்டத்தில் பணி புரியும் உள்ளூரை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்து பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்பாகவும் அவர்களின் சுகாதார நிலைமைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் காற்றாலை மின்சக்தி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் அனைத்தும் 10 வாகனங்கள் ஊடாக திருகோணமலையில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு கொண்டு வந்து தார உள்ளதாகவும், குறித்த வகனங்களின் சாரதி மற்றும் உதவியாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவது தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் குறித்த பணிகளில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் சுகாதார முறைப்படி வேலைத்திடங்களில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த வேலை நடக்கும் இடத்தை விட்டு வெளியேறுவதோ அல்லது மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்வதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனவே பொருட்கள் ஊரடங்கு நேரங்களில் மாவட்ட ரீதியாக கொண்டு வரப்படும் போதும், குறித்த செயற்திட்டம் நடை முறைப்படுத்துவது தொடர்பிலும் அப்பிரதேச மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.