பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 643 பேர் உயிரிழந்திருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பிரான்சில் கடந்த சில நாட்களாக மற்ற நாட்களுடன் ஒப்பிடும் போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 643 எனவும், இதில் மருத்துவமனையில் மட்டும் 353 பேர், முதியோர் காப்பகத்தில் 290 பேர் பேன்று சுகாதார இயக்குனர் ஜெரோம் சாலமன் இன்று அறிவித்தார்.
இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,832-ஐ தொட்டுள்ளதுடன், இதில் 4889 பேர் முதியோர் காப்பகத்தில் உயிரிழந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 987-ஆக இருந்தது, தற்போது 643-ஆக குறைந்துள்ளது. இதனால் சமீபத்திய வார இறுதி நாட்களில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக ஜெரோம் சாலமன் கூறியுள்ளதால், இறப்பும் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை என இரண்டுமே குறைந்து வருவதால் இது அந்நாட்டு மக்களுக்கு சற்று அறுதல் தரும் செய்தியாக பார்க்கப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 2,044-பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர் இப்போது ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டு வர சரியான நேரம் இல்லை, அதனால் விதிகளையும், சமூக விலகல்களையும் மக்கள் மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் திங்கட் கிழமை நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தொலைக்காட்சி உரையில் மக்கள் முன் இந்த ஊரடங்கு குறித்த சிறப்பு விதிமுறைகளைப் பற்றி பேசுவார் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.