பண்டாரவளையில் இருந்து கொண்டு சென்ற மரக்கறிகளை பலாங்கொடையில் விற்றார்கள் என்று குற்றம்சாட்டி அவற்றின் மீது மண்ணெண்ணெய் விசிறிய ஐக்கிய தேசிய கட்சியின் பலாங்கொடை மேயர் சமிக வெவகெதர தொடர்பில் பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
பலாங்கொடை நகரில் தற்போது உள்ள நிலைமையில் வீதியோரமாக பொருட்களை விற்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தும் அதனை மீறியதால் இவ்வாறு செயற்பட வேண்டி வந்ததாக மேயர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து விவசாயி ஒருவர் தெரிவிக்கையில்,
நாங்கள் பண்டாரவளையில் இருந்து மரக்கறி ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தோம். எனினும் அங்கு செல்ல முடியாத நிலைமை இருப்பதாக பலாங்கொடை நகருக்கு அருகே வரும் போது எமக்கு தெரியவந்தது.
இதனால் நாம் எமது மரக்கறிகளை பலாங்கொடை நகரில் விற்க முற்பட்டோம். அப்போதே மேயர் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டார்.
விவசாயிகளை இப்படியா கவனிப்பது? இப்படியொரு மோசமான மேயரை நாங்கள் எங்கும் கேள்விப்பட்டதில்லை என்றனர்.
இதேவேளை குறிப்பிட்ட மேயருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.