உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ், சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்தும், தடுப்பூசிக்கான ஆய்வுகள் பற்றியும் பேசியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிறப்பிடம் சீனா என்று கூறப்படுகிறது. இருப்பினும் சீனா கொரோனா வைரஸை முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது.
இது குறித்து சீன ஊடகம் ஒன்றிற்கு பில்கேட்ஸ் அளித்துள்ள பேட்டியில், இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட கண்டிப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், மக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களைக் கடந்து வந்துள்ளனர்.
இதனால் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணி பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
தற்போது, சீனாவில் பணி மற்றும் உற்பத்தி செயல்கள் மீட்சி அடைந்து வருகின்றன. கொரோனாவால் சிக்கி தவிக்கும் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சீனா மருத்துவப் பொருட்களை வழங்கி வருகின்றது.
உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிக்கு இது முக்கிய பங்காற்றும் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர், கொரோனா வைரஸின் காரணமாக உலக நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மற்றும் பாகுபாடு குறித்து கூறுகையில், நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்காலத்தில் கொள்ளை நோய் தடுப்பு, காலநிலை மாற்றம் முதலியவற்றைச் சமாளிக்க முடியாது என்று எச்சரித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், ஆற்றல் மிகு பணியாளர்கள், தடுப்பூசி, மருந்து ஆகியவை நமக்குத் தேவை. குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் சேவையளிக்கக் கூடாது. முழு உலகத்தின் முழுவதின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸால் வறுமை நிலையில் உள்ள நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பை அறிந்து கொள்ள வேண்டும். சமத்துவத்தை முன்னேற்றி, ஒன்றுக்கொன்று ஆதரவு அளிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான ஒத்துழைப்பில், சீனா மேலும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும் என்று நம்புவதாக தெரிவித்தார்.