“நாட்டின் இன்றைய நெருக்கடியான நிலைமையில் மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அரசு செயற்படக்கூடாது. ஊரடங்குச் சட்டத்தால் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு உரிய வகையில் நிவாரணப் பொருட்களை அரசு வழங்க வேண்டும். இல்லையேல் பாரதூரமான விளைவுகளை அரசு சந்திக்க வேண்டிவரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொரோனா வைரஸின் தாக்கத்தால் இம்முறை வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டே சித்திரைப் புத்தாண்டை எமது மக்கள் வரவேற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கொடிய வைரஸ் நோயை இலங்கையிலிருந்து விரட்டும் வரைக்கும் சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி மக்கள் நடந்துகொள்ள வேண்டும். மருத்துவத்துறையினரின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும்.
கொரோனாவை விரட்ட – மக்களைப் பாதுகாக்க இரவு பகல் பாராது அயராது சேவையாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவத்துறையினர், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறையினருக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதேவேளை, கொரோனாவை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் அரசு மும்முரமாகச் செயற்பட்டாலும் ஊரடங்குச் சட்டத்தால் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றன. இதனால் மக்கள் பட்டினியால் வாடும் நிலைமை ஏற்படுகின்றது. எனவே, மக்களின் வயிற்றில் அடிக்காத வகையில் அரசு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.