தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும் இதுவரை 197 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
அதில் 119 பேர் சி.ஐ.டி.யினராலும் 78 பேர் சி.ரி.ஐ.டி.யினராலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் கைதுசெய்யப்பட்ட 197 பேரில் 90 பேர் தற்போது இவ்விரு பொலிஸ் விசாரணைப் பிரிவுகளிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் நீதிமன்றங்களில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
‘ தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சி.ஐ.டி.யினரால் 119 பேர் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் விளக்கமறியலில் உள்ள நிலையில், தற்போதும் 40 பேர் சி.ஐ.டி. தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் மொத்தமாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 78 ஆகும். அவர்களில் 50 பேர் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.’ என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
முன்னதாக கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.
கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவாப்பிட்டி – புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சீயோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்கான கிறிஸ்தவ தேவாலயங்களாகும்.
இதனைவிட கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
இந்நிலையில் அன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.