மக்களின் கண்ணீருக்கு மத்தியில் தேர்தலை நடத்தி நாட்டை சீரழிக்க எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தயாராக இல்லை எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற ஜனநாயகத்தை விட நாட்டு மக்களின் பாதுகாப்பான வாழ்விற்கு முன்னுரிமையளிக்கத் தேவையில்லையா ? என்றும் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள இந்நிலையில் அது தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் விசேட காணொளி பதிவினை வெளியிட்டு இவ்வாறு கேள்வியெழுப்பியிருக்கும் சஜித் பிரேமதாச அதில் மேலும் கூறியிருப்பதாவது :
தற்போது பொது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் பிரதான பேசு பொருளாக மாறியிருப்பது பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதாகும்.
பாராளுமன்ற ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துகின்ற அதற்கு மதிப்பளிக்கின்ற மக்கள் காணப்படுகின்ற எமது நாட்டில் அனைவரும் பாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற ஜனநாயகத்தை நாம் பலப்படுத்த வேண்டும். சமகால சூழல் தொடர்பில் காணப்படுகின்ற பிரதான பிரச்சினை தொடர்பில் நாம் கேள்வியெழுப்ப விரும்புகின்றோம்.
பாராளுமன்ற ஜனநாயகத்தை விட நாட்டு மக்களின் பாதுகாப்பான வாழ்விற்கு முன்னுரிமையளிக்கத் தேவையில்லையா? பாராளுமன்றத் தேர்தலின் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்ந்தும் அபாயகரமான நிலைக்குள் செல்லும் சந்தர்ப்பம் பாரதூரமான பாதிப்பு இல்லையா ?
உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் கொரோனா வைரஸ் வெகு துரிதமாக பரவக் கூடிய அபாயகரமான நிலைமையே தற்போது காணப்படுகிறது.
இது வரையில் சுகாதாரத்துறையினருக்கும் பாதுகாப்புத்துறையினருக்கும் அனைத்து அரச திணைக்களங்களுக்கும் மரணங்களைக் குறைத்து கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால் கிடைக்கப் பெற்ற இந்த வெற்றிகள் அனைத்தும் காட்டிக் கொடுக்கப்படும்.
தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் மிகப் பாரதூரமான அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். இந்த கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரிக்கக் கூடும்.
அதனால் பாராளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கும் தேர்தலை மதிக்கும் தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்கு தயக்கமற்ற நாம் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் மனித வளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதையும் அதே போன்று கொரோனா வைரஸை தோற்கடிப்பதையுமே எமது பிரதான இலக்காக் கொண்டுள்ளோம்.
மனித வாழ்க்கையை அபாயத்திற்குள் தள்ளி தேர்தலை நடத்துவது பொறுத்தமல்ல. தேர்தல் நடைபெறும் போது சமூக இடைவெளி பேணப்படா மாட்டாது. தேர்தலை நடத்துவதற்காக செயற்படும் பொது மக்களும் அரச அதிகாரிகளும் பாரதூரமான அவதான நிலைமைக்கு தள்ளப்படுவர்.
எனவே வாதப் பிரதிவாதங்கள் இன்றி இன , மத , கட்சி பேதம் இன்றி நாம் அனைவரும் ஐக்கியமாக நாடு முகங்கொடுத்துள்ள இப்பிரதானமான சவாலை வெற்றி கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸை முழுமையாக தோல்வியடையச் செய்வதே அந்த சவாலாகும். கொரோனா வைரஸ் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினருக்கும் பாதுகாப்புத்துறையினருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாம் எமது கவனத்தை வேறு விடயத்தில் செலுத்த தயாராக இல்லை.
கொரோனா வைரஸை தோல்வியடையச் செய்வதிலேயே எமது முழு கவனமும் இருக்கிறது. அந்த இலக்கை புறந்தள்ளி சில அரசியல் ஒழுங்கு நிரலுக்கு ஏற்ப மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் இட்டு தேர்தலுக்குச் செல்ல முடியாது. இதனை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.
எனவே நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து கொரோனா வைரஸை தோல்வியடையச் செய்வோம் என்று அனைவரிடமும் கோரிக்கை விடுகின்றோம்.
அத்தோடு பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களை விட நாட்டு மக்களே எமக்கு முக்கியமாகும்.
பொது மக்களின் கண்ணீருக்கு மத்தியில் தேர்தலை நடத்தி நாட்டை சீரழிக்க நாம் எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இல்லை. நாம் அனைவரும் நாடு என்ற ரீதியில் ஐக்கியமாக கொரோனா ஒழிப்பிற்கு எதிராக கைகோர்ப்போம். கொரோனா வைரஸ் ஒழிப்பின் பின்னர் தேர்தலுக்கு முகங்கொடுப்போம் என்றார்.