பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நாட்டில் தற்போது பட்டாசு உற்பத்தி தொழிற்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ இன்று(22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்துறை வீழ்ச்சி
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை மையமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90 சதவீதமானவை விற்பனை செய்யப்படாமல் எஞ்சியுள்ளன.
அப்போது உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப் பிறப்பின் போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிலர் அனுமதிப்பத்திரம் பெறாமலும் சில தரமற்ற பட்டாசுகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை, அவற்றுக்கான உற்பத்தி செலவுகளையேனும், மீளப்பெறுவதற்கு அவற்றைக் குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை சில உற்பத்தியாளர்கள் முன்னெடுத்துவருகின்றோம் என்றார்.