நாட்டின் தொற்றுநோய் அச்சுறுத்தல் நிலவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துவருகின்ற நிலையிலும் தேர்தலை நடத்த அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அச்சுறுத்தல் விடுப்பது போன்று அழுத்தம் கொடுப்பது மிகவும் மோசமான செயற்பாடு என கூறும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முன்னாள் எம்.பி அஜித் பி பெரேரா தேர்தல்கள் ஆணைக்குழு நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு ஒன்றினை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.
தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே முன்னாள் எம்.பி அஜித் பி.பெரேரா இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இலங்கையில் பலர் கைகொடுதுள்ளனர். இது ஒரு சிலரது வெற்றி அல்ல, நாட்டு மக்கள் அனைவரதும் வெற்றியாகும்.
இந்நிலையில் தேர்தலை நடத்தும் திகதியை அறிவிக்க பிரதமர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் இப்போதுள்ள நிலையில் தேர்தலை நடத்துவது ஆரோக்கியமான ஒன்றல்ல.
இன்னும் நாட்டில் அச்சுறுத்தல் உள்ளது. வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட அச்சுறுத்தல் நிலைமைகள் உள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் இருப்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
அவ்வாறான ஒரு நிலைமையில் தேர்தலுக்கான திகதியை வழங்குமாறு பிரதமர் கூறுவது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அச்சுறுத்தல் விடுப்பது போன்றே இது அமைந்துள்ளது.
அரசியல் அமைப்பிற்கு அமைய நடைபெறும் தேர்தல் சுதந்திரமானதாகவும் அமைதியாகவும் முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் அவ்வாறான அமைதியான முறையில் சுதந்திரமாக தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இன்னமும் உருவாகவில்லை என்பதே சுகாதார அதிகாரிகளின் கருத்தில் தென்படுகின்றது.
ஆகவே இந்த நிலையில் தேர்தலை நடத்த முடியாது, எப்போது அதற்கான சூழல் உருவாகின்றதோ அப்போது உடனடியாக தேர்தலை நடத்த முடியும். ஆனால் இப்போது தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற அழுத்தம் கொடுப்பது நாட்டினை நேசிக்கும் தலைமைகள் முன்னெடுக்கும் செயற்பாடு அல்ல.
ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழுவே உயர் நீதிமன்றத்தை நாடி, இப்போது அரசியல் அமைப்பு ரீதியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை பெற்றுக்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது எடுக்கும் தீர்மானங்கள் ஆரோக்கியமானதாக அமையாது என்பதை சுட்டிக்காட்டவும் விரும்புகின்றோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷவினர் பெற்ற வெற்றியை நாம் விமர்சிக்கவில்லை, ஆனால் பொய்யான பல காரணிகளையும் முன்வைக்கின்றனர். ஐ.சி.எம்.எ நிறுவனம் தான் இலங்கை ஆரோக்கியமான இடத்தில் உள்ளதாக கூறுகின்றது.
இதன் அதிகாரிகளாக ஜனிக ரத்னதுங்க, நாலக கொடஹெவா ஆகியோர் உள்ளனர். இவர்கள் தான் இம்முறை பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.
ஆகவே இதன் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல் கிரிட்ஸ் என்ற அமைப்பு இதுவரை எங்குமே உருவாகாத கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி உருவாகியுள்ள அமைப்பு. இவர்கள் எவ்வாறு சுகாதார தரம் பற்றி பேச முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்கள் இறந்தாலும், பாதிக்கப்பட்டாலும், நாடே நாசமாகி போனாலும் பரவாயில்லை தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற ராஜபக்ஷக்களின் நோக்கத்தை நிறைவேற்ற இவ்வாறான அமைப்புகள் கைகொடுக்கின்றது என்பதே உண்மையாகும்.