கனடாவின் நோவா ஸ்கோடியா பகுதியில் பொலிஸ் வேடத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்களில் 13 பேரை கொன்ற நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பொதுமக்களை அச்சத்தின் பிடியில் தள்ளிய குறித்த கொடூர சம்பவமானது குட்டி கடற்கரை நகரமான Portapique-ல் அரங்கேறியுள்ளது.
எரிபொருள் நிலையம் ஒன்றின் அருகே குறித்த கொலைகாரனை பொலிசார் சுட்டு வீழ்த்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் இரு பொலிஸ் அதிகாரிகளும் காயம்பட்டுள்ளனர்.
பலரை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் காரில் துரத்திய பின்னர் 51 வயதான கேப்ரியல் வோர்ட்மேனை கைது செய்ததாக முன்னர் பொலிசார் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள பொலிஸ் தரப்பு, கடந்த 12 மணி நேரத்தில் நடந்த 13 கொலைகளுக்கும் இவர் ஒருவரே பொறுப்பானவர் என்றும், அவர் மட்டும் மாகாணத்தின் வடக்குப் பகுதி முழுவதும் நகர்ந்து பல படுகொலைகளை நிகழ்த்தியதாக நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.
பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் எவரும் தெருவில் இறங்க வேண்டாம், சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெறுவதாக முன்னர் பொலிசார் எச்சரித்திருந்தனர்.
இதனிடையே, நோவா ஸ்கோடியாவின் கிழக்கு பிராந்திய பொலிசார் வோர்ட்மேனை அடையாளம் கண்டதுடன், அவர் ஆயுததாரி மற்றும் ஆபத்தானவர் எனவும் பொதுமக்கள் அவரை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த பயங்கரமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவிப்பதாக கனேடிய பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.